Home » » இயேசு உலகத்தின் ஆட்டுக்குட்டி.

இயேசு உலகத்தின் ஆட்டுக்குட்டி.


என்ன ஆச்சரியப்படுகின்றீர்கள்? நான் கூறப்போவது உண்மை. இயேசு இந்த உலகத்தின் ஆட்டுக்குட்டி. அதாவது இரட்சகர். புரியவில்லையா. தொடர்ந்து வாசியுங்கள்.

உலக மக்கள் அனைவருக்காகவும் இந்த உலகத்தில் இரட்சகராக புனித வேதாகமத்தின் அறிவிப்புப்படி கன்னிகையின் வயிற்றில் பிறந்த ஒரு சிறந்த மனிதர் இயேசு கிறிஸ்து ஆவார். அவரே ஈஸா(அலை) அவர்கள் என அழைக்கப்படுகின்றார். இயேசுவே இரட்சகர் என்பதை புனித இஞ்சில்
(பரிசுத்த வேதாகமம்) தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களிடம் அவரை இறைத்தூதர் என்று அறிவிக்கும் குர்ஆன் உள்ளது. இதில் இயேசுவின் பிறப்பு, அவரது சீடர்கள், எதிரிகளின் சூழ்ச்சிகள், இறுதி முடிவு என்று அவரைப் பற்றிய எல்லா விபரங்களும் கூறப்பட்டுள்ளன. என்றாலும் குர்ஆன் கிறிஸ்து பிறந்து ஏறக்குறைய 600 வருடங்களுக்கு பின் எழுதப்பட்டுள்ளதால் அதைவிட கிறிஸ்து பிறந்து முதல் 100 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட வேதாகமம் கூறுவதையே ஏற்றுக்கொள்ள முடியும். அதிலே அவரை கடவுளின் குமாரர் என்றும் இந்த உலகத்தின் இரட்சகர் என்றும் புனித வேதாகமம் புனித இஞ்சில் ஏற்றுக்கொள்ளுகின்றது. இன்றும் அந்த வேதாகமம் மாற்றப்படாமல் உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கின்றது.

லூக்கா நற்செய்தி நூல் 2ம் அதிகாரம் 11 ம் வசனத்தில் ‘இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.’ எனவும், பிலிப்பியர் நிருபத்தில் 3ம் அதிகாரம் 20ம் வசனத்தில் ‘நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.’ எனவும் கூறப்பட்டுள்ளதிலிருந்து இது தெளிவாகின்றது.

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த பணிகளைப் பற்றியே தெரிந்துக் கொள்ள வேண்டும். ஆகவே அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் யோவானின் சுவிசேஷத்திலிருந்து பாருங்கள்: யோவான் முதலாம் அதிகாரம் 29ம் வசனத்திலிருந்து 51ம் வசனம்வரை இவ்வாறு கூறுகின்றது:

29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர் தான். 31. நானும் இவரை அறியாதிருந்தேன். இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான். 32. பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.

33. நானும் இவரை அறியாதிருந்தேன். ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். 34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.

35. மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும் போது, 36. இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். 37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.

38. இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள். ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 39. அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.

40. யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41. அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42. பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார். கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.

43. மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு: நீ எனக்குப் பின்சென்றுவா என்றார். 44. பிலிப்பென்பவன் அந்திரோயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். 45. பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம். அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.

46. அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். 47. இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். 48. அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். 49. அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய். இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.

51. பின்னும் அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மேற்கண்ட வசனங்களுக்கு ஏற்ப இயேசுவானவர் ஆட்டுக்குட்டியாக உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்க வந்தவராக இருக்கின்றார் என்பதை நற்செய்தி நூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. இதனை குர்ஆன் மறுப்பதற்கு காரணம், அவர்கள் சமயத்தில் பாவத்திற்கு பரிகார மன்னிப்பு இரத்தத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்ளாமைதான். குர்ஆன் இல் இரத்தம் பாவத்தினை போக்கும் என்பதை உணர்ந்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. ஆனால் சத்தியவேதாகமமோ ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தம் எமது பாவத்தைப் போக்கும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது. தெய்வ தண்டனைக்கு பரிகாரம் ஒரு இரத்தமே. அந்த இரத்தம் ஒரு புனித ஆட்டின் இரத்தமாக இருக்குமென பழைய ஏற்பாடு வர்ணிக்கிறது. அந்த ஆடு இயேசு கிறிஸ்துவே என புதிய ஏற்பாடு வர்ணிக்கிறது. ஆக மொத்தத்தில், நமக்கெல்லாம் இரத்தம் கொடுக்க வந்தவர் இறைமகனான இயேசு கிறிஸ்து (ஈசா நபி) அவர் ஒருவரே ஆவார்.

இயேசு ஒருவரே இந்த உலகத்தின் அனைத்து பாவங்களுக்காகவும் தமது இரத்தத்தைச் சிந்திய ஆட்டுக்குட்டியானவர் என்பதை மறுப்பதற்கில்லை. அதனை பேதுரு இவ்வாறு 1பேதுரு 1ம் அதிகாரம் 19 ம் வசனத்தில் கூறுகிறார். ‘குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.’ ஆகவே நாம் அந்த ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள் என்ற நிச்சயத்தைப் பெற்றிருக்கின்றோமா என்பதே முக்கியமானது. மெய்யான கிறிஸ்தவர்கள் என்பவர்கள் அந்த ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்களே ஆவார்கள். அதாவது பாவத்தின் தண்டனையான நரக ஆக்கினை தீர்ப்பிலிருந்து நரகத்திலிருந்து தப்புவிக்கப்பட்டவர்களாவார்கள். இவர்களுக்காக ஆட்டுக்குட்டியாகி இயேசுவானவர் சிலுவையில் மரித்து தமது இரத்தத்தினை சிந்திவிட்டதினால் அவர் எமது இரட்சகராக திகழ்கிறார். அவர் மரித்தார். உயிர்த்தெழுந்தார். இன்றும் அவர் ராஜரீகம் செய்கின்றார்.

ஆக கடைசியாக, ‘இதோ, தேவ ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவே’ என்பதை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டிவிட்டேன். அவரை பின்பற்ற மனதுள்ளவர்களாக நீங்கள் இருப்பீர்களாயின் அவரைப் பின்பற்றுங்கள். அவரைப் பின்பற்றுகின்ற சீஷர்களே இன்று ஆடுகளாக இருக்கின்றார்கள். ஏனென்றால், தங்கள் தலைவனே ஒரு ஆடு என்றால், அவரைப் பின்பற்றுகின்ற நாமும் அவருடைய ஆடுகளாகவே இருக்கின்றோம் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

முடிவுரையாக, யோவான் 14ம் அதிகாரம் 6ம் வசனம்: ‘அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.’ என்றார்.

இக்கட்டுரையானது பரங்கிப்பேட்டை ஜி.நிஜாமுத்தீன் என்பவரால் இயேசுவுக்கு நேர்ந்ததென்ன? என்ற தலைப்பில் www.tamilmuslim.com/kirusthuvam தளத்தில் அவரால் மறுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட உலக மக்கள் அனைவரும் அறியவேண்டிய உண்மைகளை தெளிவாக விளக்குவதற்காக எழுதப்பட்ட பதில் கட்டுரையாகவும் மெய்யான சத்தியமாகவும் இந்த உண்மைகளை வேதாகமத்தின் வாயிலாகவும் அறியத்தருகின்றது.
Share this article :

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்