Home » , » ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -02

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -02


கடந்த பதிவின் தொடர்ச்சி.... 
இதன் முதல்பகுதியை வாசிக்க இங்கே கிளிக் செய்கபகுதி-1


ஏழு வித ஞானஸ்நானங்கள்
 உலகத்தில் ஏழுவித ஞானஸ்நானங்கள் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் எது வேதத்தின் முறைப்படியுள்ளது என்று கவனிப்போம்.
1.        யோவான் கொடுத்த ஞானஸ்நானம்
அப்-19:3மத்-3:11 இவ் வசனங்களில் இந்த யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை குறித்து வாசிக்கிறோம். இது மனந்திரும்புதலுக்கென்று கொடுக்கப்பட்டது.
யோவான் ஞானஸ்நானம் கொடுக்க வந்த காரணத்தை அவனே சொல்கிறான் யோவான்-1:26,27,31,33 – கர்த்தராகிய இயேசுவைக் குறித்து அவன் சொன்னது
இயேசு என்னிலும் பெரியவர் 26,27இஸ்ரவேலுக்கு அவர் வெளிப்படும் பொருட்டாக தான் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்த வந்தான் 31. அவரை எப்படி வெளிப்படுத்துவது? -33.
தேவன் அவனை அழைத்து அனுப்பும் பொழுது “ஆவியானவர் புறாவைப்போல் இறங்கி யார் மேல் தாங்குவாரோ அவரே பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கிறவர்” என்று கூறியுள்ளார். எனவே ஒரு சபையை ஸ்தாபிக்க யோவான் ஞானஸ்நானம் கொடுக்க வரவில்லை. முதற்கண் கிறிஸ்து வெளிப்பட வேண்டுமென்றே அவன் ஞானஸ்நானம் கொடுத்ததான்.  ஒரு சபையை ஸ்தாபிக்க அவன் வனாந்திரத்தில் அல்ல. ஒரு பட்டணத்தில் ஞானஸ்நானம் கொடுத்திருப்பான். இயேசுவே மேசியா – அல்லது கிறிஸ்து (அபிஷேகம் பண்ணுவதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டவர்) என்று வெளிப்படுத்தப்பட தேவன் யோவான் ஸ்நானனை அனுப்பும்போது எப்படி வெளிப்படுத்துவார் என்று கூறியிருந்தார். அதாவது  ஞானஸ்நானம் பெற்று கரை ஏறும்போது இவர் மேல் புறாவைப்போல் ஆவியானவர் வந்து தங்குவதே அடையாளம். (யோவான்-1:33மத்தேயு-3:16) யோவான் இதற்கென்றே ஞானஸ்நானம்கொடுத்தான். 
2.        குழந்தை ஞானஸ்நானம் :-
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஞானஸ்நானம் வேதத்தின்படி கொடுக்கும் ஞானஸ்நானம் அல்ல. காரணம் இக்குழந்தைகள் தங்கள் பாவத்தை அறிக்கை செய்த பின், மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று, விசுவாசத்தோடே ஞானஸ்நானம்பெறுவது இல்லையே (மாற்கு-1:5அப்-2:38மாற்கு-16:16) குழந்தைகளுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்க முடியாததால், தெளித்த ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்.    
உன்னதமான கர்த்தரை விலகிப்போனதான
மகா பொல்லாத சுபாவத்தை நீ உன்னைப்
உன் தாயின் கர்ப்பத்தில் தானே உற்பத்தியான நாளிலே
அடைந்தது மெய்யாமே
கர்த்தரின் சாயல் பாவத்தாலே
இல்லாதே போனதாலே
உன் சுபாவம் யாயும் பேயினால்
இப்பாவ விஷத்தாலே
கெடுத்துப் போடப்பட்து.
பிறந்த நாளில் ஸ்வாமிக்கு 
அத்தால் நீ பிள்ளையல்ல” (சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டு 115)
குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்போர் 1கொரி-10:1-4அப்-16:30-33, இவ்வசனங்களைக் கூறி இக்கூட்டங்களில் குழந்தைகளும் இருந்திருக்கக் கூடும் என்று தாங்களே யூகித்துக் கொள்ளுகின்றனர். இதற்கான விளக்கத்தை இதற்கு முன் இக் கட்டுரையில் படித்திருப்பீர்கள்.
ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் என்று சொல்லி சில சொட்டுத் தண்ணீரை தெளிப்பதினாலே, குழந்தைக்கு தன்னில் தானே இதைக் குறித்து  “ஞானம் இல்லை” - சில சொட்டுத் தண்ணீரை தெளிப்பதினாலே “ஸ்நானமும்” இல்லை, இது ஞானஸ்நானமே இல்லை.
3.        தெளிப்பு ஞானஸ்நானம் –
இது கி.பி 753ல் போப் ஸ்டீபன் 11 எனும் ரோம கத்தோலிக்கத் தலைவரால் நியமிக்கப்பட்டது. இது சாத்தியமாகாது. ஏனெனில் எருசலேமில் அவ்வளவு பெரிய நீர் தேக்கங்கள் இல்லை எனக் கூறுகின்றனா். ஆனால் 3000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு ஒரே நாளில் ஞானஸ்நானம் கொடுக்கப் போதுமான தண்ணீர் அந்நாட்களில் எருசலேமில் உண்டு என்று பலஸ்தீனாவைக் குறித்து எழுதப்பட்ட புஸ்தகம் ஒன்றில் வாசிக்கலாம் (The Land and Book – The Holy Land, By Dr. W.M Thompson).
இப்படி தெளிப்பதின் மூலம், ஞானஸ்நானத்தைக் குறித்து வேதத்தில் கூறப்படும் “அடக்கம் பண்ணுதல்” என்னும் சத்தியத்துக்கு நாம் கீழ்படிவதில்லை (ரோமர்-6:4கொலோ-2:12)
4.        மரித்தவர்களுக்காக பெற்றுக் கொள்ளும் ஞானஸ்நானம் 1கொரி 15:29
இது சிலருக்கு ஒருவித குழப்பத்தை உண்டுபண்ணக் கூடும். ஆதி அப்போஸ்தலர் காலத்தில் இருந்த சபை விசுவாசிகள் தங்கள் உடைமைகளை விற்று இவைகளின் கிரயத்தை அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள் அப் 4:34-37. இதற்கு காரணம். கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து “இதோ சீக்கிரமாய் வருகிறேன்” என்று சொல்லிப் போனார். மேலும் “இங்கே நிற்பவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் கானும் முன் மரணத்தை ருசிபார்ப்பதில்லை”  மத்-16:28 என்றும் கூறிப்போனார். 
இக்காரணங்களின் நிமித்தம் சிலர் தாங்கள் இரட்சிப்படைந்த பிறகு இயேசுவின் வருகையில் கைவிடப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்பி தங்களது ஞானஸ்நானத்தை தாங்கள் மரிப்பதற்கு சற்று முன்பு வரையில் ஒத்திப் போட்டிருந்தார்கள். ஏனென்றால் ஞானஸ்நானம் பெற்ற பின்பு பின்வாங்கிப் போனால் அவரது வருகையில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்களே என்று பயந்திருந்தார்கள். இப்படி ஞானஸ்நானம் எடுக்காமலேயே விசுவாசத்தில் சிலர் எதிர்பாராமல் மரித்துப் போனார்கள். அவர்களுக்காக அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒரு விசுவாசி மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று வரலாறு கூறுகிறது. இப்படிச் செய்வதும் சரியான ஞானஸ்நானம் அல்ல. அதனால் அனேகர், ஞானஸ்நானம் என்னும் அனுபவம் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் காட்டுவதும், இப்படி ஞானஸ்நானம் பெற்றவர்களின் வாழ்க்கை மறுரூபப்பட்டதுமாய் இருக்க வேண்டும் என்பதை உணராமல் போனார்கள்.  
5.        அவஸ்தை ஞானஸ்நானம் (Clincial Baptism or Death – bed Baptism)-
சில சபைகளில், மரிக்கும் தறுவாயில் உள்ள சிலர் இரட்சகராகிய இயேசுவை விசுவாசிப்பதுண்டு அவர் அவர்கள் சபையில் போதகரை அழைத்து ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வாய்ப்பும் சமயமும் இல்லாமல் போகிறது. இப்படி இருக்கையில் மருத்துவமனையில் பணி புரிகிறவர்கள் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க அதிகாரம் பெற்றிருந்தனர். மேலும் ஒரு பிரசவ சமயத்தில் குழந்தை பிறந்ததும் மரித்து விடுமானால் அல்லது மரித்து பிறந்ததனால் கல்லறையில் அடக்கம் செய்வதற்கு ஏதுவுடண்டாக மருத்துவச்சிகள் (Nurse or Midwife) அக் குழந்தைக்கு பெயர் சூட்டி கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஞானஸ்நானம் கொடுத்து வந்த பழக்கம் இருந்து வந்தது, இதுவும் வேதத்தின் முறையல்ல. 
6.        “இயேசுவின் நாமத்தில்” எடுக்கும் ஞனஸ்நானம்
நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் ஊழியத்திற்கு அப்போஸ்தலரை அனுப்பும்போது கொடுத்த கட்டளை யாதெனில் “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்” என்பதே, முதலில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்கிற மூன்று தேவர்கள் அல்ல. ஒரே தேவனாக ‘திரியேகத்வம்’ வாய்ந்தவராய் இருப்பதனால் “நாமத்தில்” என வாசிக்கிறோம். யூதர் பிதாவாகிய தேவனை விசுவாசித்திருந்தனர். பரிசுத்த ஆவியாகிய தேவனையும் விசுவாசித்தனர். குமாரனாகிய இயேசுவும் தேவன் என்பதை அறிக்கை செய்யும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தனர். எனினும் இயேசுவின் நாமத்தில் மட்டும் ஞானஸ்நானம் கொடுப்பது நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு பூரணமாய்க் கீழ்ப்படிவது அல்ல.
அப்போஸ்தலர்-19:1-5 இவ்விடத்தில் எபேசுவிலே சபையின் பிறப்பைக் குறித்து வாசிக்கிறோம். அப்பொல்லோ என்பவன் முதலாவது வந்து தனது சாதுரியமான பிரசங்கத்தினாலே எபேசு பட்டணத்தில் மனந்திரும்பினவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தான். அந்த விசுவாசிகளைப் பார்த்து பவுல் “நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான், அற்கு அவர்கள் “பரிசுத்த ஆவி உண்டென்று நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றனர். “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்று கேட்க, அவர்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்றார்கள்.
இவ்வேதப்பகுதியை நீங்கள் கவனித்தீர்களா? பரிசுத்த ஆவி என்ற பெயரை கேள்விப்படுவதற்கும் அவர்கள் எடுத்த ஞானஸ்நானத்திற்கும் சம்பந்தம் என்ன? இதனால் நாம் அறிவது யாதெனனில் இந்த புறஜாதி சபைக்கு கர்த்தரின் கட்டளையின் படியே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்திருக்க வேண்டும். யூதரல்லாதவராகிய நமக்கு வேதமுமில்லை. மெய்யான தேவனைக் குறித்த அறிவுமில்லை.  வாக்குத்தத்தங்களுமில்லை. இஸ்ரவேலின் காணியாட்சிக்கு புறம்பாக இருந்தோம் (எபே-2:11-13).
எனவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராகிய திரியேக தேவனை விசுவாக்கும் நாம் நமது ஆண்டவருடைய கட்டளையின்படி மூன்று நாமங்களில் அல்ல ஆனால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் இவ்விடத்தில் வேறு ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும். “இயேசு” என்னும் நாமத்துக்கு “இரட்சகா்” என்று பொருள் (மத்-1:21)   
இந்த இயேசுவாலேயன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழ் எங்கும் மனுஷா்களுக்குள்ளே இந்த இயேசு எனும் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை” (அப்-4:12) “பூமியிலே மனுஷகுமாரனுக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரமுண்டு” (மாற்-2:10) 
இவ்வேத வாக்கியங்களை நாம் வாசிக்கும் போது “இயேசு” என்னும் நாமமே இரட்சிக்கும் நாமம் என்றும், உலகத்தில் கிருபையின் காலத்தில் ஒருவன் மரிக்கும் முன்பு – இந்த நாமம் பாவியை இரட்சிக்கக் கூடும் என்றும் அறிகிறோம். எனவே இந்த இயேசுவின் நாமமே பாவாத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு அவசியம் இப்படி பாவிகளின் இரட்சிப்புக்கென்று அவசியமான இந்த இயேசு என்னும் நாமத்தை சிலர், பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கென்று உபயோகப்படுத்துவது சாத்தானின் சூழ்ச்சியே. அவர்களை ஒருவன் கேட்டால் “இயேசு” என்னும் நாமத்தை முக்கியப்படுத்தி சொல்வார்கள். ஆனால் பாவிகளின் இரட்சிப்புக்கென்றால், ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கென்றே இந்த இயேசுவின் நாமத்தை உபயோகப்படுத்துகிறார்கள். 
காரியத்தின் கடைத் தொகை யாதெனில் இரட்சிக்கப்படாதவர்கள் இன்னும் ஆயிரம் ஆயிரமாய் கிறிஸ்துவற்ற கல்லறைக்குள் சென்று கொண்டே இருக்கையில் “இயேசுவின்” நாமத்தையே உபயோகப்படுத்தி இரட்சிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப பாவங்களிலிந்து இரட்சித்து, மன்னித்து, விடுவிக்கிறவர் என்று அவர்மேல் விசுவாசம் வைக்க ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். இந்த விஷயத்தில் நாம் மனிதருக்கு அல்ல, நமது ஆண்டவராகிய இயேசுவுக்கே கீழ்ப்படிய வேண்டியது அவசியமாகும். (அப்-5:29).         
7.        நாம் இப்பொழுது தேவ முறைமையின்படி எடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் காண்போம்.
1.     ஞானஸ்நானம் என்றால் என்ன?
2.   அந்த ஞானஸ்நானம் யார் எடுக்க வேண்டும்?
3.    அதை எப்படி எடுக்க வேண்டும்?
4.    அப்படி வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்து எடுப்பதினால் பலன் என்ன?
மேற்கூறிய இக்கேள்விகளுக்கு சத்திய வேதம் தெளிவாய் எவ்வளவேனும் சந்தேகத்திற்கு இடமின்றி எவரும் அறிந்து உணர்ந்து கீழ்ப்படிவதற்கு ஏதுவாக நமக்குப் போதிக்கிறது,
  I.      ஞானஸ்நானம் என்றால் என்ன?
A.      அது தேவ நீதி – மத்-3:15லூக்-7:29
B.      அது தேவ ஆலோசனை – லூக்-7:30
C.      அது தேவ கட்டளை – மத்-28:18-20
D.      அது தேவனோடு செய்யும் உடன்படிக்கை - 1பேதுரு-3:21

A.      அது தேவ நீதி- மத் 3.15, லூக் 7.29 
“இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” இவைகள் நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கூறிய வார்த்தைகள். மனிதருக்குள்ளே நீதிமான் ஒருவருமில்லை (ரோமர்-3:10). நமது நீதி எல்லாம் அழுக்கான கந்தையே (ஏசா-64:6). நமது நீதி என்னும் வஸ்திரம் கந்தையாயிருப்பதினால் ஒன்றுக்கும் பிரயோஜனப்படாது (எரே-13:1-7) இப்பொட்டரித்துப்போன நமது நீதி என்னும் வஸ்திரத்திற்கு பதிலாக தேவ நீதியாகிய இயேசுக் கிறிஸ்துவை நாம் தரித்துக்கொண்டவர்களாயிருக்க வேண்டும். அதை நாம் ஞானஸ்நானத்தின் மூலம் செய்கிறோம் (கலா-3:27) இதுவே தேவ நீதி. இப்படி வசனத்திற்கு கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் பெறுவதின் மூலம் தேவ நீதியை அறிக்கை செய்கிறோம். (லூக் 7.29)

B.      அது தேவ ஆலோசனை – லூக் 7.30 
தேவ ஆலோசனை என்பது நமது ஆலோசனையை விட மிகவும் உன்னதமானது. “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா-55:8) அவர் தமது நல் ஆலோசனைகள் யாவற்றையும், போதிப்பார். “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்கு போதித்து நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற கர்த்தர். அவருடைய கற்பனைகளை நாம் கவனித்தோமாகில் நலமாயிருக்கும்” (ஏசா-48:7-18) தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் பவுல் பிரசங்கித்தார் (அப்-20:26-27) எனவே தேவ ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாமல் அதை தள்ளி விட்டவர்கள் தங்களுக்கு தாங்களே கேடுண்டாக்கிக் கொண்டார்கள் (லூக்-7:30) தேவ ஆலோசனையின் படி செய்வது நல்லது.

C.      அது தேவ கட்டளை – மத் 28.18,20
“நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவும்” என்று நமது ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தைகளை நீர் சிந்திப்பீராக. கட்டளை கீழ்ப்படிய வேண்டுமென்றே கொடுக்கப்படுகிறது. பேசுகிறவருக்கு செவிகொடுக்க மாட்டோமென்று விலகினவர்களே தப்பிப்போகாமலிருக்க பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டு விலகினால் எப்படி தப்பிப் போவோம்? (எபி-12:25). மேலும் அவர் கடினமான கட்டளைகளை நமக்குத் தந்து போகாமல் எளிதாய் அனுசரிக்கக் கூடிய கட்டளைகளைத் தந்து போயிருக்கிறார். ஆனால் இலகுவான கட்டளைக்குக் கீழ்ப்படிய மனமில்லை. அவருடைய நுகமும், சுமையும் இலகுவானவைகளே   (மத் 11:29-30). எல்லாவற்றிற்கும் இருதயமே காரணம். கர்த்தருடைய பிரமாணம் ஒன்றும் கடினமானவைகள் அல்ல. கீழ்ப்படிய மனமுண்டானால் வழி உண்டு. ஒரு வேளை பாலிலோ அல்லது பன்னீரிலோ ஞானஸ்நானம் எடு என்று வேதம் கூறியிருந்தால் அப்படி செய்ய பலர் தங்கள் ஆஸ்தியை செலவு பண்ண ஆயத்தமாயிருப்பார்கள். வெறும் தண்ணீரில் என்று வேதம் சொல்லுகிறதினாலே பணம் காசு ஒன்றும் செலவில்லாமல் எந்த மனுஷனும் இக்கட்டளைக்கு கீழ்ப்படியலாமே, எனவே இருதயமே இதற்குக் காரணம் “நீர் என் இருதயத்தை விசாலமாக்கும் போது நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்” (சங்-119:32).

D.      அது தேவனோடு செய்யும் உடன்படிக்கை - 1பேதுரு-3:21
நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை என்று இவ்விடத்தில் ஞானஸ்நானத்தை குறித்து வாசிக்கிறோம். இது ஒரு உடன்படிக்கை என்றால் இரண்டு பேர் அவசியம். வேதத்தில் வாசிக்கும் உடன்படிக்கைகளை நாம் கூர்ந்து கவனிக்குங்கால் தேவனும் மனிதனும் செய்த எல்லா உடன்படிக்கைகளிலும் தேவன் ஒரு போதும் உடன்படிக்கையை மீறவே இல்லை. எல்லா சமயங்களிலும் மனிதனே அப்படி மீறினதைப் பார்க்கிறோம். உடன்படிக்கை எதற்கு? இதில் சம்பந்தப்பட்ட இருதரத்தாரும் இதற்கு உண்மையாயிருப்பேன் என்று உடன்படுவதற்கென்றுதானே! எனவே தேவன் ஞானஸ்நானத்தில் அவருடைய வசனத்திற்கு கீழ்ப்படிகிற மகனுக்கோ, மகளுக்கோ தமது வாக்குத்தத்தத்தில் எப்பொழுதும் உண்மையுள்ளவராகவே இருக்கிறார். எனவே இந்த உடன்படிக்கையில் நாமும் பொறுப்புள்ளவர்களாய் கடைபிடிக்க எதிர்பார்க்கப்படகிறோம்.
ஞானஸ்நானத்தில் அவரோடே கூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் (கொலோ-2:12) உலகத்தில் பல மதக் கர்த்தாக்கள் உபதேசித்து கடைசியில் மரித்துப் போய் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். அவர்களது கல்லறைகள் இன்றும் உலகத்தில் பல இடங்களில் உண்டு. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஒன்று மட்டும் இன்றும் காலியாக உள்ளது. அவர் அடக்கம் பண்ணப்பட்டு உயிரோடே எழுந்தார். ஒரு விசுவாசி ஞானஸ்நானத்தின் மூலம் இப்படி அடக்கம் பண்ணப்படும் போது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டு அவர் உயிர்த்தெழுந்த கல்லறையிலிருந்து வெளி வந்தது போல இப்படி ஞானஸ்நானம் பெறும் தானும் கிறிஸ்துவோடு கூட அடக்கம் பண்ணப்பட்டு புதிதான ஜீவன் உள்ளவராய் எழும்புகிறான் (ரோமர்-6:4) இயேசுவின் சிலுவையில் மரணத்தினால் நமக்கு இரட்சிப்பு உண்டாவது மாத்திரம் அல்லாமல் அவரது உயிர்த்தெழுதலினாலும் நமக்கு இரட்சிப்பு உண்டாகிறது. இப்படி ஞானஸ்நானத்தினால் உமது இரட்சிப்பு பூரணப்படுகிறது. (1பேது-3:21பிலி-2:12).
  II.      ஞானஸ்நானம் யார் பெற வேண்டும்?
A.      மனந்திரும்பியவன் – அப்-2:38
B.      பாவங்களை அறிக்கை செய்தவன் – மாற்-1:5
C.      விசுவாசமுள்ளவன் மாற்-16:16
D.      சீஷனானவன் – மத் 28.18-20

A.      மனந்திரும்பியவன் –அப்-2:38
பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலையும் பெறாமல், பாவத்தை விட்டு மனந்திரும்பாதவனுக்கு ஞானஸ்நானம் தேவையில்லை. மனம் திரும்ப வேண்டிய அவசியம் என்ன? மனம் திரும்பாவிட்டால் பழைய ஜீவியத்திற்கும், புதிய ஜீவியத்திற்கும் வித்தியாசம் இருக்காது – இருக்க முடியாது. சில சமயங்களில் சிலர் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய சில சலுகைகளினிமித்தம் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். அவர்கள் ஜீவியம் தேவனை மகிமைப்படுத்தாததினால் அவர்களால் சுவிசேஷத்துக்கு களங்கம் வருகிறதேயன்றி வேறில்லை. மனம் திரும்புதல் மிகவும் அவசியமாகும். மனம் திரும்பியவனுக்கே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்.

B.      பாவங்களை அறிக்கை செய்தவன் – மாற்-1:5
“பாவங்களை அறிக்கை செய்தல்” என்பதன் பொருள் யாது? பலர் இயேசுவின் இரத்தத்தை வெறும் குழாய்த் தண்ணீரைப் போல கருதி, தண்ணீரில் நனைந்தவன் தான் குளித்துவிட்டதாக எண்ணுவது போல அவர்களது இரட்சிப்பும், பாவம் நீங்கி சுத்திகரிக்கப்படுவதும் அவ்வண்ணமே இருக்கிறது. ‘ஜயோ! அதமானேன்; அசுத்த உதடுகளுள்ள மனுஷன்’ (ஏசா-6:5) என்று தீர்க்கத்தரிசி கூறினது போல, பாவங்களை ஒரு மனிதனிடத்திலல்ல, அவைகளிலிருந்து இரட்சிக்க வல்லவரான இயேசுவினிடத்திற்கே அறிக்கை செய்ய வேண்டும். ஆண்டவரே நான் பாவி என்று மட்டும் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. அவைகளை மறைக்காமல் கர்த்தரிடத்தில் அறிக்கை செய்து விட்டு விட்டு ஞானஸ்நானம் பெற வேண்டும் (நீதி 28.13). பாவத்தை வைத்துக் கொண்டே ஞானஸ்நானம் எடுப்பது காய்ந்த பாவியாக இருந்தவன் நனைந்த பாவியாக மாறியது போன்றதே.

C.      விசுவாசமுள்ளவன் மாற்-16:16
விசுவாசி! யார் அந்த விசுவாசி? யார் மேல் விசுவாசமுள்ளவன்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது பாவங்களுக்காக பலியாக்கப்பட்டதை விசுவாசிக்க வேண்டும் (யோவான்-1:12) அப்படி விசுவாசம் வைக்கும் ஒருவர் அவ்விசுவாசத்தை கிரியையில் காட்டாமல் இருக்க முடியாது. கிரியையில்லாத விசுவாசம் செத்தது” என்று அறியீரோ? (யாக்-2:20)

D.      சீஷனானவன் – மத்-28:18-20
சீஷனாவதின் கருத்தென்ன? குருவை பின்பற்றி அவரைப் போலவே ஜீவிப்பவன் சீஷன். சீஷர்கள் இயேசு கிறிஸ்துவைப் போல் ஜீவித்தபடியால், அவர்களுடைய வாழ்க்கை அவ்வளவாய் கிறிஸ்துவை பிரதிபலித்ததினால் அந்தியோகியா பட்டணத்தில் அந்த சீஷர்களுக்கு “கிறிஸ்தவர்கள் (கிறிஸ்து+அவர்கள்) என்று பெயர் வழங்கப்பட்டது. (அப்-11:26). ஞானஸ்நானம் பெறுவது மாத்திரமல்ல, உள்ளத்தில் ஏற்பட்ட இந்த இரட்சிப்பின் அனுபவத்தை வெளியே காட்டுவதுதான் ஞானஸ்நானம். எனவே சீஷனே, நீர் கிறிஸ்துவின் சீஷன் என்பதை மறக்கலாகது,  

  III.     ஞானஸ்நானம் எப்படி கொடுக்கப்பட வேண்டும்?
A.     தண்ணீர் மிகுதியான இடத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் – யேவான்-3:23
B.     தண்ணீருக்குள் இறங்க வேண்டும் – அப்-8:38
C.     தண்ணீருக்குள் அடக்கம் பண்ணப்பட வேண்டும் – கொலோ-2:12
D.     தண்ணீரிலிருந்து எழுப்பப்பட வேண்டும் ரோமர்-6:4-5

A.     தண்ணீர் மிகுதியான இடத்தில் சென்று ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்
“சலீம் ஊருக்கு சமீபமான ஆயினோன் என்னுமிடத்தில் தண்ணீர் மிகுதியாய் இருந்தபடியினால் யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்த வந்தான்” (யோவான்-3:23). தண்ணீருக்கள் ஒரு விசுவாசி அடக்கம் பண்ணப்படுவதற்கு ஏதுவாய் அதிகம் தண்ணீர் அவசியம். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கவோ, ஒருவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கவோ முடியாது.    

B.    தண்ணீருக்குள் இறங்க வேண்டும் – அப்-8:38
     இவ்விடத்தில் “பிலிப்புவும், மந்திரியும் தண்ணீருக்கள் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்” என்று வாசிக்கிறோம். ஞானஸ்நானம் எடுப்பவரும், அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் தேவ ஊழியரும் தண்ணீருக்கள் இறங்க “தேவ ஊழியர் அவரை தண்ணீருக்கள் அடக்கம் செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக இருவரும் தண்ணீரில் இறங்க போதுமான தண்ணீர் இருக்க வேண்டும்.
C.    தண்ணீருக்குள் அடக்கம் பண்ணப்பட வேண்டும் – கொலோ-2:12
“ஞானஸ்நானத்தில் அவரோடே கூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாயும்” என்று வாசிக்கிறோம். இதன் பொருள் நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியின் வல்லமையினால் மரணத்தை ஜெயித்து எழுந்தது போல, பாவத்துக்குச் செத்ததுண்டானால் கிநிஸ்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது போல நாமும் தண்ணீருக்குள் ஞானஸ்நானத்தின் மூலம் அடக்கம் பண்ணப்பட வேண்டும். (ரோமர்-8:11)

  IV.     இதன் இலாபம் என்ன?
A.    நேச, பிரிய குமாரன் என்று அழைக்கப்படுகிறோம்.  மத்-3:17
B.    பரிசுத்த ஆவியை பெறுகிறோம். மத்-3:16அப்-2:38
C.    புதிய ஜீவியம் அடைகிறோம் – ரோமர் -6:4
D.    கிறிஸ்துவை தரித்துக் கொள்கிறோம்  கலா-3:27-28
இவ்வண்ணம் சத்திய வேதத்தில் தெளிவாக எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் ஞானஸ்நானத்தை குறித்து எழுதியிருக்கிறதினால் இது தேவ ஆலோசனை என்றும், இதனை தள்ளிப் போடக்கூடது என்றும், அப்படி தேவ ஆலோசனையை தள்ளிப் போடுகிறவா்கள் தங்களுக்குத் தாங்களே கேடு உண்டாக்கிக் கொள்கிறார்கள் என வேதம் எச்சரிக்கிறது லூக்-7:30.
இப்படி கர்த்தருடைய வசனத்தின் படி ஞானஸ்நானம் எடுப்பதினால் உண்டாகும் நன்மை யாது?
A.     நேச, பிரிய குமாரன் என்று அழைக்கப்படுதல். மத்-3:17
இயேசு தேவனுடைய குமாரன் தான், ஆயினும் ஞானஸ்நானம் பெற்ற பின்னரே நேச குமாரன் என்றும் பிரிய குமாரன் என்றும் பரலோகத்திலிருந்து பிதாவின் சத்தம் அழைத்ததைக் கேட்க நேரிட்டது. ஞானஸ்நானத்தில் தேவ ஆலோசனைக்குத் தன்னை கீழ்ப்படுத்தினபோது மட்டுமே அல்லவா? தேவனுடைய பிள்ளைகளாக தேவனுடைய குடும்பத்தில் மறபடியும்பிறந்தவர்கள் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து “எனது பிரிய குமாரன், பிரிய குமாரத்தி” என பரம பிதாவினால் அங்கீகரிக்கப்படுவது நமக்கு நல்லதல்லவா?

B.     பரிசுத்த ஆவியை பெறுகிறோம்.  மத்-3:16அப்-2:38
“நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோர்தானில் “ஞானஸ்நானம் பெற்று கரை ஏறின உடனே, இதோ வானம் அவருக்கு திறக்கப்பட்டது. தேவ ஆவியானவர் புறாவைப் போல் இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார்.
ஞானஸ்நானம் பெறுவதின் பாலபலனில் மற்றொன்று பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவது “தேவன் தமக்கு கீழ்ப்பகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்த ஆவி” (அப்-5:32) என நாம் வாசிக்கிறோம். ஞானஸ்நானத்தைக் குறித்து வேத வசனம் சொல்லும் ஆலோசனைக்குக் கீழ்ப்பகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தந்தருளப்படுகிறது என வாசிக்கிறோம். சிலர் நாங்கள் ஞானஸ்நானம் எடுக்காமலேயே பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறோம். எங்களுக்கு ஞானஸ்நானம் தேவையா? என வினவுகிறார்கள். அவர்களுக்கு வேதம் கட்டளையிடுவது யாதெனில் “பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா? என்று சொல்லி கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் படி கட்டளையிட்டான்” (அப்-10:47-48)
     சத்திய வசனம் எவர்களையும் சந்தேகத்துக்குள்ளாக்காமல் தெள்ளத்தெளிவாய் இந்த ஆவிக்குரிய அனுபவத்தை குறித்து நமக்கு போதிக்கிறது.    
C.     புதிய ஜீவியம்  ரோமர்-6:4
     “நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம்”
     இந்த புதிய ஜீவியம் ஒரு சாட்சியின் ஜீவியம்! பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின, இதோ பார், எல்லாம் புதிதாயின – 2கொரி-5:17. அப்புது ஜீவியம் ஜீவிப்பதற்கு ஒரு புது குடும்பம், அதாவது சபையில் சேர்க்கப்பட்டு, ஜக்கியப்பட்டு ஜீவிக்கிறதாகிய ஒன்று. “ஞானஸ்நானம் பெற்றவர்கள் சபையில் சேர்க்கப்பட்டார்கள்” (அப்-2:40) சபையில் ஒரு சரீரமாக ஜீவித்து, அதில் ஒரு அவயவம் பாடுபட்டால் மற்ற அவயவங்கள் அதனோடு கூட பாடுபடும் என்ற புதிதான குடும்ப கட்டு ஒன்று உருவாக்கப்படுகிறது. இது ஒரு பாக்கியமே! இப்படி ஞானஸ்நானம் பெற்றவர் கர்த்தருக்கு சாட்சியாக ஜீவிக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.
D.     கிறிஸ்துவை தரித்துக் கொள்ளுதல் – கலா-3:27-28      
“உங்களில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர் எத்தனை பேரோ அத்தனை பேரும் கிறிஸ்துவை தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. யூதனென்றும், கிரேக்கனென்றும் இல்லை (ஜாதி வித்தியாசம் இல்லை) அடிமையென்றும், சுயாதீனனென்றும் இல்லை (அந்தஸ்தில் வித்தியாசம் இல்லை) ஆணென்றும், பெண்ணென்றும் இல்லை (பால் வித்தியாசம் இல்லை) நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்கள் ஒன்றாயிருக்கிரீர்கள்” ஞானஸ்நானம்பெற்றதின் மூலம் அவரைத் தரித்துக் கொண்டவர்களாயும் ஒரே குடும்பத்தினராயும் மாறிவிடுகிறோம். இதுவே வேதத்தின் படி ஒரு விசுவாசி எடுக்கம் ஞானஸ்நானம்.
கடைசியாக :
வேதத்தை வாசிக்கிற
அதன் சத்தியத்தை விசுவாசிக்கிற
அதன் அருமைகளை நேசிக்கிற
அதன் கருத்தை யோசிக்கிற
அதை மற்றவர்களுக்கு உபதேசிக்கிறவரே!
இதுவே சத்தியம் என்று
உம் மனச்சாட்சிக்கு
நன்றாய்த் தெரியும்
ஆனால் வீண் வைராக்கியத்தை விட்டு
சத்தியத்தை வாங்குவீர்
எக்கிரயம் கொடுத்தாகிலும் வாங்குவீர்
சத்தியத்தை விற்காதீர் (நீதி-23:23)
“புருஷனைப்போல் இடைக்கட்டிக் கொள்வீர்”
பருவமடைந்தவரைப் போல் –
பொறுப்பள்ளவரைப் போல் –
இடைக்கட்டிக் கொள்வீர் – யோபு-38:3
“தாமதிக்கிறதென்ன…………… நீ எழுந்து
இப்பொழுதே ஞானஸ்நானப்படு” அப்-22:16  


நன்றி - பாஸ்டர். பாஸ்கர் தாசன்  

இதன் முதல்பகுதியை வாசிக்க இங்கே கிளிக் செய்க
Share this article :

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்