Home » » பாஸ்டர் புளோரெஸ்கோ - (இயேசுவின் இரத்த சாட்சிகள்--பதிவு- 01)

பாஸ்டர் புளோரெஸ்கோ - (இயேசுவின் இரத்த சாட்சிகள்--பதிவு- 01)இயேசுவை அறிவித்த ஒரே காரணத்துக்காக சிறை சென்றவர்
“கிறிஸ்தவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகியின் மகன் என்ற அநியாயமான பெயர் எனக்கு வேண்டாம் அப்பா”

1960 ஆம் ஆண்டு பாஸ்டர் புளோரெஸ்கோ ரோமானியாவில் “இயேசுவே மெய்யான தேவன்” என்று அறிவித்த ஒரே காரணத்துக்காக கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் அவரைக் கொரடூரமாகத் தாக்கி பயங்கர இரத்தக் காயங்களுடன் சிறையில் அடைத்தனர்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் மீண்டும் மீண்டும் சிறைக்கு வந்து “உன்னோடு சேர்த்து இயேசுவை வழிபடும் மற்றவர்கள் யார் யார் இருக்கின்றார்கள்? அவர்களுடைய பெயரைச் சொல்” என்று கேட்டு பல வகையில் கொடுமைப் படுத்தினார்கள். எதைக் கேட்டாலும் எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாகவே இருந்து சாதித்தார். 

கம்யூனிஸ்ட் தீவிரவாதிகளுக்கு அது ஒரு சவாலாகவே மாறி விட்டது. பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பியுடன் தீவிரவாதிகள் சிறை அறைக்குள் நுழைந்தனர். புளோரெஸ்கோவிற்கு சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் தக தக என அக்கினியைக் கக்கிக் கொண்டிருக்கும் கம்பியின் கொடிய காட்சி அச்சத்தை உருவாக்கிற்று. “இது என் நொந்து போன சரீரத்தில் படுமானால் என் நிலை என்னவாகும்” என்ற பயம் ஒரு பக்கம், “கர்த்தர் பெரியவர், அவர் எனக்கு நலமானதை செய்வார்” என்ற உறுதி மறு பக்கம். அச்சத்தின் மத்தியிலும் உறுதியே மேலோங்கி நின்றது. அவர்கள் கேட்ட எந்த தகவலும் அவர் கூற மறுத்து விட்டார். பழுக்க காய்ச்சிய கம்பி அவரது உடலில் பல இடங்களில் பாய்ந்து தன்னிலுள்ள அக்கினியின் உக்கிரத்தைத் தீர்த்துக் கொண்டது. மயங்கி விழுந்த நிலையில் விட்டு விட்டுச் சென்றனர்.

பல நாட்கள் பட்டினி போடப்பட்ட பல எலிகளை அவரது அறையில் விட்டனர். இரண்டு வாரங்கள் இரவும் பகலும் அவைகள் அவரைத் தூங்க விடவில்லை. தூங்கினால் எலிகள் தாக்கி விடும். உட்காரக் கூட முடியாமல் விழிப்போடிருந்து அவற்றை விரட்டிக் கொண்டு நின்றார். இந்த நிலையில் அவ்வப்போது வந்து அவரைக் கேள்வி கேட்பார்கள். அவர் மௌனமே சாதித்தா். தன்னோடுள்ள கிறிஸ்தவ சகோதரர்களை அவர் காட்டிக் கொடுக்கவே இல்லை. அதில் உறுதியான வைராக்கியமாயிருந்தார்.

கடைசியாக கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் புளோரெஸ்கோவின் 14 வயதான மகனைக் கொண்டு வந்தனர். பாஸ்டருக்கு முன்பாக ஒன்றுமறியாத அவனை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்தார்கள். புளோரேஸ்கோ இதை தாங்க முடியாமல் துடித்துப் போனார். பாஸ்டரின் உறுதி அசைய ஆரம்பித்தது. “அலெக்சாண்டர் என் மகனே, உன்மேல் விழும் அடிகளை என்னால் தாங்க முடியவில்லை, அவர்கள் விரும்புகிற தகவல்களை நான் சொல்லித்தான் ஆகவேண்டுமோ? என்னால் இதை சகிக்க முடியவில்லையே” என்று கதறினார்.

“அப்பா என்னைக் கொன்றாலும் அதைத் தாங்கிக் கொள்ளுங்கள். மற்றவர்களைப் பற்றி சொல்லி விடாதிருங்கள், கிறிஸ்தவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகியின் மகன் என்ற அநியாயப் பெயர் எனக்கு வேண்டாமப்பா” என்று தைரியமாக பதிலுரைத்தான். “என் மகனே” என்று புளோரெஸ்கோ கதறினார். “அப்பா நான் செத்தாலும் இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே சாவேன், நீந்கள் பயப்பட வேண்டாம்” என மகன் தைரியம் சொன்னான்.

எதையோ எதிர்பார்த்து மகனைக் கொண்டு வர அது வேறு வகையில் திரும்பி விட்டதே என்ற கடுங் கோபத்தில் அவனைத் தாக்கினார்கள். அவன் சிந்திய இரத்தம் சிறைச் சுவர்களெல்லாம் தெறித்தது. இயேசுவைத் துதித்துக் கொண்டே ஜீவனை விட்டான்.

“அலெக்சாண்டர், என் மகனே நீ எனக்கு முந்திக் கொண்டாய், நீ இயேசுவோடு இருப்பாய். நானும் வந்து உன்னைக் காண்பேன்” என்றார். இரத்த சாட்சிகளின் ஒரு சொட்டு இரத்தம் கூட வீணாகிப் போவதில்லை. அவை யாவும் ஜீவனுள்ள வித்துக்கள். அவைகள் முளைத்தெழும்பும்.
Share this article :

1 comments:

Deva said...

அருமையான அசைக்க்கூடிய இரத்தசாட்சி :)

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்