Home » » டெலிமாக்கஸ் (Telemachus)- (இயேசுவின் இரத்த சாட்சிகள்--பதிவு- 02)

டெலிமாக்கஸ் (Telemachus)- (இயேசுவின் இரத்த சாட்சிகள்--பதிவு- 02)


டெலிமாக்கஸ் (இவர் ஒரு கிறிஸ்தவ துறவி)
தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்.
தேவனுடைய சித்ததிற்கு ஒரு மனிதன் முற்றிலும் கீழ்ப்படிந்ததினாலே பொழுது போக்கு என்ற பெயரில் நடந்து வந்த மனிதநேயமற்ற மூடத்தனமாக கொலைகள் நிறுத்தப்பட்டன”

முதலாம் நூற்றாண்டில் டெலிமாக்கஸ் (Telemachus) என்ற துறவி (கி.பி.34) ஒருவர் இருந்தார். பெரும்பான்மையான நேரத்தை ஜெபத்திலும். வேதவாசிப்பிலும் தியானத்திலும் செலவழித்து வந்தார். மற்ற நேரங்களில் தனது சிறிய தோட்டத்தில் காய்கறிகள் பயிர் செய்து அவற்றை அருகாமையிலுள்ள வேதம் கற்போரின் மடத்திற்கு அனுப்பிவைப்பார். ரோம சாம்ராஜ்யத்தின் சமுதாயத்தில் சந்தடிகளுக்கெல்லாம் அப்பால் அமைதியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் எங்கோ ஒரு மூலையில்தான் அந்த மடம் இருந்தது. அதன் அருகாமையில் தான் டெலிமாக்கஸ் வாழ்ந்து வந்தார்.

ரோம் உலகத்திலேயே செல்வச் செழிப்பான பெருநகரம். அதுவே ரோம சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரம். ஒருநாள் கர்த்தர் அவரை ரோம் நகரத்திற்கு போகச்சொல்கிறார் என்பதை துறவி உணர்ந்தார். ஆனால் எதற்காக அவரை போகச் சொல்கிறார் என்பது அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ரோம் நகரத்திற்கு போகவேண்டுமென்ற எண்ணம் அவரது இருதயத்தில் ஒரு அச்சத்தை உண்டாக்கியது. ஆனால் அவர் போக வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்பதை ஜெபத்தில் உறுதிப்படுத்திக் கொண்டார்.

தனக்கென்றுள்ள கொஞ்ச ஜாமான்களையும் மூட்டையாகக் கட்டி முதுகில் சுமந்து கொண்டு ரோம் நகரத்தை நோக்கி தன்னுடைய நடை பயணத்தை துவக்கினார். சரியான வழித்தடங்கள் இல்லாத்தால் கல்லும் மண்ணும் தூசியும் நிறைந்த வழியில் சிரமங்களைத் தாங்கிக் கொண்டு நடந்தார். ஏன் அவர் ரோம் நகரத்திற்குச் செல்கிறார்? அது அவருக்கே தெரியாது. அங்கே போய் அவர் எதைப் பார்க்கப்போகிறார்? அவருக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார் புறப்பட்டார்.

ரோம் நகரமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கோத் நாட்டோடு நடந்த சண்டையில் ரோம சாம்ராஜ்ஜியம் அடைந்த வெற்றியை பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். ஏதாவது கலைநிகழ்ச்சிகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், சத்திரங்களில் இலவச உணவு விநியோகங்கள் நடந்து கொண்டேயிருந்தன. துறவிக்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை, இங்கே ஏன் தேவன் அவரை அனுப்பினார்? அவருக்கு எல்லாம் புரியாத புதிராயிருந்தது. சரியான நோக்கம் இல்லாமல் தேவன் தன்னை அனுப்பமாட்டார் என்ற உறுதியோடு இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கும் மத்தியில் அவர் காண்கிற ஒவ்வொன்றிலும் தன்னை இங்கு கொண்டு வந்த தேவனுடைய நோக்கத்தை  விளங்கிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வழி காட்டவோ கலந்து ஆலோசிக்கவோ ஒருவருமில்லை.

ஒரு பெரும் கூட்டம் மிகுந்த ஆர்வத்தோடு சென்று கொண்டிருந்தது. டெலிமாக்கஸ் அந்தக் கூட்டத்தோடு பின் தொடர்ந்து  சென்றார். ஒரு பிரமாண்டமான திறந்தவெளி அரங்கத்திற்கு வந்து சேர்ந்தார் (Coliseum) ஆயிரக்கணக்கான  மக்கள் அடுக்கு படிக்கட்டு இருக்கைகளில் (Gallery) உற்சாகத்தோடு அமர்ந்திருந்தனர்.

டெலிமாக்கஸீம் ஒன்றும் புரியாதவராய் இருக்கையில் அமர்ந்தார்சுற்றிலும் பார்த்தார். ரோம சக்கரவர்த்தி தன்னுடைய பரிவாரங்கள் சூழ உயர்ந்த இடத்தில் அமர்ந்திருந்தார்.அந்த இருக்கைளின் கீழே அமைக்கப்பட்டிருந்த அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் பயங்கர மிருகங்களின் குரல் பெரும் அச்சத்தை உண்டாக்குவது போலிருந்தது. அரங்கத்தின் மத்தியில் பெரிய மைதானம். மனிதர்களை மைதானத்தில் நிறுத்தி சிங்கம்இ புலி போன்ற கொடிய மிருகங்களை திறந்து விடுவார்களாம். மனிதன் தன் ஜீவனைத் தப்பித்துக் கொள்ள அந்த மிருகங்களிடம் போராடுவதையும், போராடிப்போராடிக் கடைசியாக மிருகங்களுக்கு இரையாகும் மனிதர்களைக் கண்டுகளிப்பது இந்த மக்களின் பொழுது போக்கு விளையாட்டாம். துறவிக்கு கேட்பதற்கே அச்சமாயிருந்தது.

ஆனால் இப்போது நடக்கப் போகிற நிகழ்ச்சி அதுவல்ல. இந்த மைதானத்தில் வாள்போர் வீரர்கள் (Gladiators) ஒருவரோடொருவர் உண்மையிலேயே சண்டையிட்டு மரிப்பார்களாம். அதுவும் ஒரு பொழுது போக்கு விளையாட்டாம். தேவன் ஏன் அவரை இங்கு கொண்டு சென்றார்?
பெரும் ஆரவாரச் சத்தம் கேட்டு டெலிமாக்கஸ் மைதானத்தை உன்னிப்பாக கவனித்தார்

வாட்போர் வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்தனர். பெரும் சத்தத்தோடு சக்கரவர்த்திக்கு முதலில் வணக்கம் செலுத்தினார்கள். என்ன சத்தம் அது? 'சிறிது நேரத்தில் மரிக்கப் போகும் நாங்கள் உங்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்' இதைக் கேட்ட டெலிமாக்கஸ் திகிலடைந்தார். இது போன்றதொரு காட்சியை தன்னுடைய வாழ்நாளிலே அவர் கண்டதில்லை. ஆனால் இந்த கொடிய நிகழ்ச்சியில் தான் விரும்பாத ஒன்று நடக்கப் போகிறது என்பதை அவர் முன்பாகவே உணர்ந்தார்.

வேடிக்க பார்க்க வந்த மக்கள் அவர்களை உற்சாகப்படுத்தம் வகையில் மகிழ்ச்சி ஆரவராம் செய்தனர். ஒருவருரையொருவர் கொலை செய்வதைக் கண்டா இவர்கள் மகிழ்ச்சியடையப் போகிறார்கள்? மனிதர்களுடைய ஜீவன் இவர்களுடைய பொழுது போக்கிற்கு செலவிடப்படுகிறது. என்ன நடக்கப் போகிறத என்பதை உணர்ந்த துறவிக்கு அமைதியாக உட்காரமுடியவில்லை. இந்த கொடிய காட்சியைக் காண அவர் விரும்பவில்லை. அதே  சமயத்தில் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு வெளியே போகவும் மனதில்லை

திடீரென்று ஒரு துணிச்சல் பெற்றவராய் அரங்கத்திலிருந்து மைதானத்தின் சுற்றுப்புற சுவரின்மேல் குதித்தார். சுவரில் நின்று கொண்டு தன்னால் இயன்ற உச்சத் தொனியில் 'கிறிஸ்துவின் நாமத்தினலே நிறுத்துங்கள், கிறிஸ்துவின் நாமத்தினலே நிறுத்துங்கள்' என்று வாட்போரிடுவோரை நோக்கி சத்தமிட்டார். அவருடைய சத்தத்தை யாரும் சட்டை செய்வதற்காக தெரியவில்லை. வாட்போர்  துவங்கிவிட்டது. ஆகவே துறவி அவசர அவசரமாக படிக்கட்டில் இறங்கி சண்டையிடும் களத்திலேயே குதித்தார். அங்குமிங்குமாக ஓடி வாட்போர் வீரர்கள் ஒவ்வொருவரையும் பிடித்த இழுத்து சண்டையை நிறுத்த தன்னால் இயன்ற அளவு முயற்சி செய்தார் அவர் சிறிய உருவமாய், ஆயுதமற்றவராய் அங்குமிங்கும் ஓடியதை வாட்போர் வீரர்கள் விரும்பவில்லை மாறாக அவர் இடையூராக இருக்கிறார் என்றே எண்ணினார்கள். ஒரு வாட்பொர் வீரன் தான் வைத்திருந்த கேடயத்தால் ஓங்கி ஒரு அறை அறைந்து 'உன்னுடைய இருக்கையில் போய் உட்கார்' என்று கத்தினான். ஆனாலும் அவர் நிறுத்துவதாக தெரியவில்லை. வேடிக்கை பார்த்த மக்களும் அவரை மைதானத்தை விட்டு வெளியேறும்படி சத்தமிட்டார்கள்.

ஆனால் துறவி தன்னுடைய முயற்சியை நிறுத்தவில்லை வாட்போரில் ஒருவரை ஒருவர் பாய்ந்து தாக்க முற்படும் போதுஅவர் குறுக்கே சென்று மீண்டும் சத்தமிட்டார். 'கிறிஸ்துவின் நாமத்தினாலே நிறுத்துங்கள்' வேடிக்கை பார்க்க வந்தவர்களில் சிலர் துறவியின் செயலைக் கண்டு சிரித்தனர். ஒரு வேளை இதுவும் அந்த பொழுது போக்கு நிகழ்ச்சியைச் சேர்ந்த ஒரு பகுதியோ என்று நினைத்தனர். துறவி இவ்வாறு குறுக்கிட்ட காரணத்தால் வாட்போர் வீரர்கள் அவரை ஒரு இடையூறாகக் கருதினார்கள் வேடிக்கை பார்த்த கூட்டத்தாருக்கும் நமது பொழுது போக்கிற்கு இடையூறாக நிற்கிறாரே என்று துறவியின் செயலில் வெறுப்புற்றவர்களாக 'அவரைக் கொல்லுங்கள்' என்று கூட்டத்தில் பெரும் பகுதியினர் உரக்கக் கத்தினார்கள்

துறவியின் மீது கோபமடைந்த ஒரு வாட்போர் வீரன் அவனது வாளை ஓங்கி துறவியை அவரது மார்பிலும் வயிற்றிலும் வெட்டினான். மார்பிலிருந்து இரத்தம் பீரிட்டு பாய்ந்தது துறவி இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரது சரீரத்திலிருந்து இரத்தம் பாய்ந்தோடியது. துறவி தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை 'கிறிஸ்துவின் நாமத்தினாலே நிறுத்துங்கள்' கிறிஸ்துவின் நாமத்தினாலே நிறுத்துங்கள்' என்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தார். சத்தம்  நின்றுவிட்டது.

எதிர் பாராத ஒன்று நடந்து விட்டது. வாட்போர் வீரர்களின் கவனமும் அசைவற்றக் கிடக்கும் துறவின் பக்கம் திரும்பியது. திடீரென்று பெரும் அமைதி நிலவியது. இந்த அமைதியின் மத்தியில் தனது மனதில் குற்ற உணர்வுள்ளவராக ஒருவர் எழுந்தார். வேகமாய் அரங்கத்தை விட்டு  வெளியேறினார். அதை அடுத்து மற்றவர் தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து வேடிக்கை பார்க்க வந்த கூட்டமே கலைந்து அரங்கத்தை விட்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் முழு அரங்கமும் வெறிச் சோடிக்கிடந்தது.

ஒன்றுமறியாத குற்றமற்ற துறவி நெஞ்சு பிளக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் அசைவற்றுக் கிடந்தார். ஆனாலும் மகாபெரிய வேலை துவங்கிற்று தனது கடைசி மூச்சிலும்கிறிஸ்துவின் நாமத்தினாலே நிறுத்துங்கள்”கிறிஸ்துவின் நாமத்தினாலே நிறுத்துங்கள்” என்ற அவரது கடைசி சத்தம் ஒவ்வொருவருடைய மனச்சாட்சியிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது.

அதுவே அந்த மாபெரும் அரங்கத்தில் நடந்த கடைசி வாட்போர். அதற்குப் பின் மனிதனை மனிதன் கொலை செய்வதைக் கண்டு களிக்கும் கூட்டம் அங்கு கூடவே இல்லை ரோம் நகரத்தில் அந்த அரங்கம் அழிந்து கிடக்கும் நிலையில் இன்று சாட்சியாக நிற்கிறது. தேவனுடைய சித்தத்திற்கு ஒரு மனிதன் முற்றிலும் கீழ்ப்படிந்ததினாலே பொழுது போக்கு என்ற பெயரில் நடந்த மனிதநேயமற்ற மூடத்தனமாக கொலைகள் நிறுத்தப்பட்டன.


தேவனுடைய வழிகள் ஆராயப்படாதவைகள், ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்' (ரோம.11:33, யோபு.9:10).

------------- நன்றி - இயேசுவுக்காய் இரத்தம் சிந்த துணிந்தவர்கள் ----------------

                      
Share this article :

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்